Sundarar
சுந்தரமூர்த்தி சுவாமிகள்

சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூர் என்னும் திருத்தலத்தில் ஆதிசைவக் குலத்தைச் சார்ந்த சடையனார் - இசைஞானியார் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் நம்பி ஆரூரர்.

திருக்கயிலாய மலையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்து வந்த ஆலால சுந்தரர், ஒருநாள் இறைவனுக்கு மலர் தொடுக்க நந்தவனத்துக்குச் சென்றார். அங்கே அநிந்திதை, கமலினி என்னும் இரு பெண்களைக் கண்டு சலனம் அடைந்தார். அந்த இரு பெண்களும் இவர் மேல் அன்பு கூர்ந்தனர். இதை அறிந்த இம்மூவரையும் மண்ணுலகில் பிறந்து வாழ ஆணையிட்டார். அவ்வாறே ஆலால சுந்தர், நம்பி ஆரூரராகப் பிறந்தார்.

அப்பகுதியை ஆண்டு வந்த நரசிங்க முனையர் என்ற மன்னர் வீதிவழியே வரும்போது, சுந்தரரது தெய்வீக ஒளியைக் கண்டு அவரைத் தன் குழந்தையாக ஏற்றார். நம்பி ஆரூரர் வளர்ந்து மணப்பருவம் அடைந்ததும், புத்தூரில் வாழும் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைப் பேசி முடித்தனர். மணக்கோலத்தில் ஆலால சுந்தரர் அழகாக இருந்ததால், "சுந்தரர்" என்று அழைக்கப்பட்டார். தாலிகட்டும் நேரத்தில் இறைவன் வயோதிகராக வந்து, ஒரு ஓலையைக் காட்டி, "நீ என் அடிமை" என்று கூற, சுந்தரர் கோபம் கொண்டு, "ஒரு அந்தணர் மற்றோர் அந்தணர்க்கு அடிமையாவாரோ? நீர் பித்தரோ?" என்று கூறி, ஓலையைக் கிழித்துப் போட்டார். அங்குள்ள பெரியோர்களின் அறிவுரைப்படி, முதியவரின் ஊரான திருவெண்ணைநல்லூரில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சாட்சி கேட்க, முதியவர், ஆரூரன் கிழித்தது பிரதி ஓலை, மூல ஓலை என்னிடம் உள்ளது என்று எடுத்துக் காட்டினார். பழைய பிரதியை ஒப்பிட்டுப் பார்த்து, சுந்தரர் முதியவருக்கு அடிமை என்று தீர்ப்புக் கூறினர்.

நீதிபதிகள் முதியவரிடம், அவருடைய வீடு எங்கே என்று கேட்க, முதியவர் திருவெண்ணை நல்லூர் கோயிலுக்குள் புகுந்து மறைந்தார். அனைவரும் இறைவனைப் பணிந்தனர். இறைவன் அசரீரியாக, "எம்மிடம் கோபமாகப் பேசியதால் இனி 'வன்தொண்டன்' என்று அழைக்கப்படுவாய்" என்று கூறி சுந்தரருக்கு பாடும் திறம் அளித்தார். என்ன சொல்லி பாடுவேன் என்று கேட்க, என்னை பித்தா என்று அழைத்ததால் அதையே முதலாகக் கொண்டு பாடுக என்று பணித்தார் இறைவன். சுந்தரர் பல தலங்களைத் தரிசனம் செய்து திருவாரூரை அடைந்தார்.

திருவாரூரில் கமலினி, பரவையார் என்ற பெயரில் பிறந்து வளர்ந்து வந்தார். ஒருநாள் இருவரும் ஆலயத்தில் சந்தித்துக் கொண்டனர். இறைவனின் ஆணைப்படி அடியார்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். குண்டையூர் என்ற கிராமத்தில் உள்ள வேளாளர் ஒருவர் சுந்தரருக்கு வேண்டிய நெல்லை அனுப்பி வந்தார். மழை இன்மையால் ஒருமுறை நெல் அனுப்ப முடியாமல் போக, இறைவன் அருளால் அவ்வூர் முழுவதும் நெல் குவிந்தது. இச்செய்தியை வேளாளர் சுந்தரருக்கு தெரிவிக்க, சுந்தரரின் வேண்டுகோளின்படி இறைவன் அருளால் பூதகணங்கள் இரவோடு இரவாக நெல் முழுவதும் திருவாரூர் வீதிகளில் கொண்டு வந்து சேர்த்தனர். மறுநாள் காலையில் தம் வீட்டின் முன் உள்ள நெல்லைக் கண்டு மக்கள் வியந்தனர். அவரவர் வீட்டின் முன் உள்ள நெல் அவரவரைச் சாரும் என்று சுந்தரர் அறிவித்தார்.

சுந்தரர் திருக்குருகாவூர் சென்றபோது, வெயிலின் கொடுமையால் வாட, இறைவன் தண்ணீர் பந்தல் அமைத்து நீரும், உணவும் வழங்கினான். அதேபோல் திருக்கச்சூர் என்ற தலத்தில் சுந்தரர் பசியால் வாட, இறைவன் அந்தணர் வடிவத்தில் வந்து பிச்சையெடுத்துச் சுந்தரருக்கு சோறு வழங்கினான். சுந்தரர் பல தலங்களை தரிசனம் செய்து திருவொற்றியூர் அடைந்தார். அங்கு அநிந்திதை, சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து வளர்ந்து வந்தார். சுந்தரர் கோயிலில் அவளைக் கண்டதும் திருமணம் செய்துக் கொள்ள நினைத்து இறைவனை வேண்டினார். அன்றிரவு இறைவன் சங்கிலியார் கனவில் தோன்றி சுந்தரரை மணக்கும்படி கூற, அதற்கு சங்கிலியார், "சுந்தரர் முன்பே திருமணமானவர், ஆதலால் என்னைப் பிரிந்து செல்வாரே" என்றார். "உன்னைப் பிரியாதிருக்க சத்தியம் வாங்கிவிடு" என்று இறைவன் சங்கிலியாரிடம் கூறிவிட்டு, சுந்தரரின் கனவில் தோன்றி நடந்ததைச் சொன்னார். அதற்குச் சுந்தரர், நாளை தான் அவரது சன்னதி முன்பு சத்தியம் செய்து கொடுக்கும்போது, அங்கிருந்து மறைந்து மகிழ மரத்தடிக்குச் சென்று விடுங்கள் என்று வேண்டினார். அதற்குச் சம்மதித்த இறைவன், சங்கிலியாரின் கனவிலும் தோன்றி உண்மையைச் சொல்லி, மகிழ மரத்தடியில் சத்தியம் பெறச் சொன்னார்.

மறுநாள் சங்கிலியாரும், சுந்தரரும் ஆலயத்தில் சந்தித்தனர். தன்னைப் பிரியாதிருக்கச் சத்தியம் செய்து தருமாறு சங்கிலியார் கேட்க, சுந்தரரும் இசைந்து இறைவன் சன்னதி நோக்கி சென்றார். வழியில் மகிழ மரம் இருக்க, "இங்கேயே சத்தியம் செய்தால் போதும்" என்று சங்கிலியார் கேட்க, வேறு வழியின்றி சுந்தரரும் செய்து கொடுத்து திருமணம் நடந்தது. சில நாட்களில் சுந்தரருக்கு திருவாரூர் செல்ல வேண்டும் என்று தோன்ற, திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டார். சத்தியத்தை மீறி எல்லையைத் தாண்டியதால் சுந்தரரின் கண்கள் குருடாயின. எனினும் அவர் இறைவனை வேண்டித் தொடர்ந்து சென்றார். திருவெண்பாக்கம் என்ற தலத்தில் அவருக்கு ஊன்றுகோல் வழங்கிய இறைவன், காஞ்சிபுரத்தில் இடக்கண் பார்வையை அளித்தார். பிறகு திருவாரூர் சென்று இறைவனை வணங்கிச் சுந்தரர் வலக்கண் பார்வையைப் பெற்றார். சுந்தரர் திருவாரூரை அடைந்ததும் பரவையாரைப் பார்க்க சென்றார். அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட, சுந்தரர் இறைவனை அவளிடம் தூது செல்லும்படி வேண்டினார். இறைவன் அர்ச்சகர் வேடத்தில் பரவையாரிடம் தூது சென்று சுந்தரரை ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, பரவையார் மறுத்து விட்டார். பின்னர் வந்தது இறைவன் என்பதை உணர்ந்து மீண்டும் சுந்தரருடன் வாழத் தொடங்கினார்.

சேரநாட்டில் கொடுங்களூதைத் தலைநகராகக் கொண்டு சேரமான் பெருமாள் அரசாண்டார். சிவபக்தரான அவர் தினமும் இறைவனை வணங்கி முடித்ததும் இறைவனின் பாத சிலம்பொலி கேட்கும். ஒருநாள் அது கேட்காததால் அரசன் தற்கொலை செய்துக் கொள்ள முயல, இறைவன் அசரீரியாக, "அஞ்சற்க, சுந்தரரின் பாட்டில் மயங்கியதால் சிலம்பொலி செய்யவில்லை" என்றார். அன்று முதல் சேரமான் சுந்தரரிடம் அன்புக் கொண்டு அவரைக் காண திருவாரூர் வந்தார். பின்னர் இருவரும் புறப்பட்டு பல தலங்களைத் தரிசித்து சேரநாடு அடைந்தனர். அங்கு சிலகாலம் இருந்துவிட்டு சுந்தரர் மீண்டும் திருவாரூர் வந்து சேர்ந்தார். சில காலம் கழித்து சுந்தரரின் உள்ளம் அக வாழ்க்கையைவிட்டு அருள் வாழ்க்கையில் சேர்ந்தது. அவர் மீண்டும் சேரநாடு சென்றார்.

ஒருநாள் சுந்தரர் திருவஞ்சைக்களத்து இறைவனை வணங்கி தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். உடனே இறைவன் தேவர்களை அனுப்பி வெள்ளை யானையில் சுந்தரரை அழைத்து வரப் பணித்தார். சுந்தரரும் யானையில் ஏறும்போது, சேரமான் பெருமாளை நினைத்தார். இவர் கயிலாயம் செல்வதை உணர்ந்த சேரமான் பெருமாள் அருகில் இருந்த ஒரு வெள்ளைக் குதிரையில் ஏறி அதன் காதில் இறைவனின் மந்திரமாகிய பஞ்சாட்சரத்தை ஓத, குதிரை உடனே பறந்தது. இருவரும் ஒன்றாக கயிலாயம் அடைய இருவருக்கும் இறைவன் அருள்புரிந்தான். பரவையாரும், சங்கிலியாரும் இறையருள் பெற்றுக் கயிலாயம் அடைந்தனர். சுந்தரர் தமது 18வது வயதில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று திருக்கயிலாயம் அடைந்தார். இவர் பாடிய பாடல்கள் சைவத்திருமுறைகளில் ஏழாம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.

ஏழாம் திருமுறை

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.